பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்79


தாடகையைக் கொல்லுமாறு இராமனைத் தூண்டுகின்றார். இராமன் தாடகை மீதுவிட்ட அம்புகள் தாடகையின் நெஞ்சில் பாய்ந்து அப்புறம் கழன்று போயின. அவை, அற்பர்களுக்கு அறிஞர்கள் சொன்ன அறிவுரை போல ஆயின.

சொல் ஒக்கும் கடிய வேகச்
        சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
        விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
        அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
        பொருள் எனப்போயிற்று அன்றே!

(கம்பன்-388)

என்று விளக்குகின்றான் கம்பன்.

வாலி வதம்

அடுத்து நடந்த போர் வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்த போர். வாலி வலிமை மிக்கவன். வாலி சுக்கிரீவனை விரட்டி விரட்டி அடித்தான். இப்போரில் இராமன் தலையிட்டதனால் போர் என்று கூற இயலாது. இராமனுடைய அம்புக்கு வாலி இரையாகிறான்.

"ஆழிசூழ் உலகம் எல்லாம்
        பரதனே ஆள, நீ போய்,
தாழ்இருஞ் சடைகள் தாங்கி,
        தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணி,
        புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வா என்(று)
        இயம்பினன் அரசன்” என்றாள்.

(கம்பன்-1601)