பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


மனைவி சீதை அழவேண்டும். அல்லது என் மனைவி என்னை இழந்து அழவேண்டும்; இரண்டில் ஒன்று நடக்கும்’ என்று கூறுகின்றான். இராமனும் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். போர் நடந்தது. இராவணன் படிப்படியாக மனம் மாறுகின்றான்; உணர்கின்றான். ஆனால், மாற்றம்தான் ஏற்படவில்லை. இன்றும் மக்களில் பலர், நல்லதை அறிவார்கள், உணர்வார்கள். ஆனால், துணிவுடன் ஏற்கமாட்டார்கள், செயலாக்கத்திற்குக் கொண்டுவரத் தயங்கித் தயங்கி மற்றவர்களுடைய உறவை இழக்கின்றனர்; வாழ்க்கையை இழக்கின்றனர் இராவணன் இந்த வர்க்கத்தினன் போலும்! இராவணனுடைய சுத்தவீரத் தன்மையைக் கம்பன்,


“ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்”

என்று கூறி விளக்குகின்றான்.

செருகளத்தில் நின்ற இராவணனுக்குத் தெளிந்த சிந்தனை அரும்புகிறது; தனக்கு எதிரில் நின்று போரிடுபவன் மனிதன் அல்லன்; பரம்பொருள் என்று உணர்கின்றான்.


“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ? அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ் வேத முதல் காரணன்” என்றான்.

(கம்பன்-9837)

இராமன், இராவணனது தலையில் ஒன்றை அம்பினால் கொய்து வீழ்த்துகின்றான். இந்த அரிய பேறு தவத்தினால் மட்டுமே வாய்க்கும். இராவணன் கைகள் வெட்டப்படுகின்றன, தலைகள் வீழ்த்தப்படுகின்றன. இராவணன் மூர்ச்சித்து விடுகின்றான். இராவணன், இராமனுடைய பிரமன் அம்பும், சக்கராயுதமும் சேர்ந்து தாக்க, உயிரிழக்கிறான். இராவணன் மரணம் எய்தினான். கடவுள்கள் அருளிச் செய்யும் வரம், வீரம் எதுவும் நிற்காது போலும்!