பக்கம்:கம்பன் கலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ல் கம்பன் கலை காரியத்திற்காக எடுத்த அவதாரம் என்ற முறையிலே முடிவு கூறிவிட்டார்கள். அம்சாவதாரம் என்று கூறினதாலேயே முழு அவதாரமாக வருகின்ற கிருஷ்ணாவதாரத்திற்கும் இராமாவதாரத்திற்கும் கீழான நிலையினர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் இன்று ஆர அமரச் சிந்திப்போமேயானால், நம்முடைய பெரியவர்கள் மிக ஆழ்ந்த சிந்தனையோடுதான் இந்த இரண்டு அவதாரங்களையும் பேசியிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வர முடிகின்றது. இராமாவதாரத்தை எடுத்துக்கொள்வோமேயானால், பரசுராமாவதாரம் அதற்கு முற்பட்டது. ஆனால் இராமாவதார காலம் வரை இருந்திருப்பதாகப் பேசப்படுகிறது; பாரத காலத்திலும் தொடர்வதாகக் கூறும் மரபும் உண்டு. பரசுராமனுடைய வரலாறு ஆராய வேண்டிய ஒன்று. ஜமதக்னியினுடைய மகனாவான் பரசுராமன். ஜமதக்னியினிடத்தில் மாறுபாடு கொண்டு, அவனுடைய பசுவை, ஒமப் பசு என்று சொல்லப்படுகின்ற காமதேனுப் பசு வைக் கவர்ந்து சென்றுவிட்டான் கார்த்த வீரியார்ஜுனன் என்ற மன்னன். கார்த்தவீரியார்ஜுனனை மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் வெல்ல முடியாது, எந்த அரசரும் வெல்ல முடியாது என்ற அளவிலே வர பலம் பெற்றவன். அப்படிப்பட்டவன் பசுவினைக் கவர்ந்து சென்றுவிட்டான் என அறிந்த ஜமதக்னி முனிவன் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறபோது, அவனுடைய மகனாகிய பரசுராமன் தன்னுடைய தவபலம், வரபலம், போராண்மை என்பனவற்றைத் துணையாகக் கொண்டு கார்த்த வீரியார்ஜுனனைக் கொன்று விட்டான். கார்த்த வீரியார்ஜுனன் கொல்லப்பட்டான் என்ற உடனேயே பரசுராமனுடைய அகங்காரம் எல்லை. மீறிவிட்டதைக் காண்கின்றோம். இதுபோன்ற வரலாறுகள் தமிழ்நாட்டிலே இன்னமும் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/10&oldid=770607" இலிருந்து மீள்விக்கப்பட்டது