பக்கம்:கம்பன் கலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ல் கம்பன் கலை பக்கத்திலே இருக்கின்ற சுவருக்கும், அவனுக்கும் வேறுபாடு இல்லை என்பதாக முடிந்துவிடுகிறது. அப்படிப்பட்ட வேறுபாட்டை உண்டாக்கக்கூடிய புலன்களைப் பெற்றுள்ள மனித வாழ்வில் ஏன் புலன் அடக்கம் செய்தல் வேண்டும் என்பது நல்ல கேள்விதான். படைப்பின் உண்மை அதுவானால், பொறி புலன்களை வைத்துக்கொண்டுதான் மனிதன் வாழ வேண்டும் என்பது உண்மையானால் மெய், வாய், கண், மூக்கு, செவி இறைவனுடைய கருணையினாலே நமக்குத் தரப்பட்டிருக்குமானால், அந்த மெய், வாய், கண், மூக்கு, செவிகளினாலே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றத்தை நாம் அனுபவிக்கவேண்டும் என்பது உண்மையானால், ஏன் அவற்றை அடக்கவேண்டும்? இந்த வினாவை இன்றல்ல, நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய பெரியோர்கள் கேட்டார்கள். பொறி புலன்களை ஆண்டவன் தந்திருப்பதன் நோக்கமே அவற்றை அனுபவிக்க வேண்டுமென்பதுதானே? அப்படி யிருக்க அவற்றை அடக்க வேண்டுமென்று ஏன் கூறுகிறோம் என்று கேட்டார்கள். திருமூலர் பாடினார்: "ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார், ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை" என்று. மேலும், ஐந்து பொறி புலன்களையும் அடக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள். அறிவில்லாதவர்கள் என்று ஒரு படி மேலேயே போய் விட்டார் திருமூலர். தம்முடைய கொள்கைக்கு ஆதாரமாக ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை' என்று கூறிய பிறகு, அவ்வாறாயின் இந்த உலகத்திலே இருக்கின்ற மக்களைப்பற்றி நீ பேசவேண்டிய இன்றியமையாமை யாது என்று கூடக் கேட்டுவிட்டார். அப்படியானால் எந்தவிதமான புலன் அடக்கமும் தேவையில்லையோ என்று நினைத்துவிடவேண்டா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/102&oldid=770610" இலிருந்து மீள்விக்கப்பட்டது