104 கம்பன் கலை வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் திக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் உடைய ஒருவன்-கேவலம் இந்தப் புலனடக்கம் என்ற ஒன்றின்மையால் இந்த ஒரே காரணத்தால், எவ்வளவுபெரிய வீழ்ச்சியை அடைந்து விடுகின்றான்! மனிதனாகிய தசரத குமாரனாக, அரச குமாரனாகப் பிறக்கின்ற ஒருவன், சாதாரணமாக மக்களுள்ளே ஒருவனாகப் பிறந்த ஒருவன், தான் மட்டுமல்லாமல் தம்பியர், தன்னோடு சேர்த்த நண்பர் ஆகிய அனைவருமே இந்தப் புலன் அடக்கம் என்ற ஒரு காரியத்தைச் செய்ததற்காக, வானுறையும் தெய்வத்துள் வைத்து எண்ணப்படுகின்ற நிலையை அடைகின்றார்கள். இதனை விளக்கிய கம்பனைவிட, புலன் அடக்கம் உண்மையால் பெற்ற பயனையும், புலன் அடக்கம் இன்மையால் பெற்ற தீமையையும் அழகாக எடுத்துக் காட்டியவர்கள் வேறு யார்? - புலனடக்கம் செய்தவருள் அனுமனுக்கே முதலிடம் தரல் வேண்டும். மானிட வடிவங்கூட அல்லாமல் விலங்கு வடிவம் பெற்றவன். அரச குமாரர்கள், மானிடரிலும் அழகுடையவர்களை மட்டுமே கண்டு பழக்கம் உடைய இராம இலக்குவர்கள் அனுமன் எதிரே காட்சி அளிக்கின்றார்கள். எதிரில் உள்ள குரங்கு வடிவம் இவர்களாலே விரும்பத்தக்கது என்றுகூடச் சொல்லுவதற் கில்லை. ஆனால், அந்த வடிவத்தின் தோற்றத்தில் ஓர் உண்மையைக் காணுகின்றார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆற்றலும், நிறையும், கல்வியும், அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள், விலங்கு வடிவமாக இருக்கின்ற இவனுடைய முகத்திலே இருக்கின்ற அந்த தேஜஸ் அல்லது ஒளியிருக்கிறதே, அந்த ஒளி காண்பவர் மனத்தில் என்னென்ன எண்ணங்களை உண்டாக்குகின்றது! ஆற்றல்,
பக்கம்:கம்பன் கலை.pdf/114
Appearance