பக்கம்:கம்பன் கலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கம்பன் கலை போற்றப்படுகின்ற இராமனுக்கு, தன்னுடைய வாழ்வின் குறிக்கோள் என்று பரதன் கருதிய இராமனுக்கு அல்லவோ கைகேயி தீங்கு செய்ய நினைத்து விட்டாள். தன் கொள்கை அழிந்தபொழுது பரதன் சீறி எழுகின்றான். பரதன், அவன் தாய் என்ற அந்த உரிமை அப்பொழுது அற்றுவிடுகிறது. கொள்கையும், கொள்கைக்கு அடியிலே நிற்கின்ற மானிடர்களும் என்ற அடிப்படைதான் அங்கு விளங்குகின்றது. ஆகையால், கொள்கைக்கு எப்பொழுது ஊறு நேர்ந்தாலும் அங்கே கோபம் வருகின்றது. எனவே, புலனடக்கம் என்று பேசிக்கொண்டு கொள்கையை விட்டுவிடுதல் புலனடக்கம் இல்லை. அந்தப் புலன்களை வைத்துக்கொண்டு ஆள்கிறதுதான் புலனடக்கம் என்பதைப் பரதனுடைய வாழ்வில் காண்கின்றோம். புலனடக்கம் செய்தான் எனினும், அஃது எங்கே தேவையில்லையோ அங்கே இந்தப் புலனடக்கத்தை உதறி விடுகின்றான். இதன் எதிரே இராவணனுடைய புலனடங்காத நிலையையும் காண்கின்றோம். இராமன் சீதையை மேன்மாடத்தில் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டு உறக்கம் இன்றி வருந்துகிறான். இராவணனும் சீதைபாற் கொண்ட தகாத காமத்தால் பெரிதும் வருந்துகிறான். எனவே, இரண்டும் ஒன்றுதான் என்று கூறிவிட முடியுமா? புலனடக்கம் என்றால் புலனை அவித்து விடுவது என்று பொருள் இல்லை! எல்லை கட்டி வாழ்வது என்பதே பொருள். இராமனுடைய காதல் வரம்பிலே நின்றது; இராவணனுடைய காமம் வரம்பு கடந்தது. அடுப்பிலே நெருப்பிருக்குமேயானால் அருமையான சோறு கிடைக்கும். கூரையிலே நெருப்பு பற்றுமேயானால் என்ன நிகழும்? தையலும் தானுமாய் இரவிலே இராமன் நிற்கும்பொழுது, அஃது ஒப்பற்ற காதலாக மிளிர்கின்றது. ஆனால், மற்றொருவன் இல்லுறை தவத்தியிடத்து இரக்கங் காட்டாமல் தவறான வழியிலே இராவணன் செல்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/125&oldid=770635" இலிருந்து மீள்விக்கப்பட்டது