பக்கம்:கம்பன் கலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 121 இராமனுடைய அம்பைக் கூட மார்பைத் துளைத்து அப்புறம் போகாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்ற ஒருவன் இராமகாதையில் உளன் எனின் அவன் வாலியே tԼ1IT6չlք հծT. இத்தகைய முறையில் தன் மார்பையும் பிளக்கும் ஆற்றலுடன் அம்பு எய்தவன் யாராக இருக்கும் என்று ஆராய்ந்த வாலி தேவர் முதலியோர்க்கு இவ்வாற்றல் இல்லை என்பதால், ஒருவனே! இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம் ! (69) என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அனுமானத்தின் மூலம் வந்த இம் முடிவைச் சரிபார்ப்பதற்காகப் போலும், மார்பைப் பிளந்து செல்ல முயலும் அம்பைத் தன் கைகள், கால்கள், வால் ஆகியவற்றால் பற்றி ஓரளவு வெளியே இழுத்து, எய்தவன் பெயரை அறிந்து கொள்ள முயன்றான். பூர்வ புண்ணியங் காரணமாக ஒரு சிலருக்கு ஞானம் வரச் சில எதிர்பாராச் செயல்கள் காரணமாகின்றன. திருப்பெருந்துறையில் ஞானம் பெறத் திருவாதவூரருக்குக் குதிரை வாங்க வேண்டும் என்ற செயல் காரணமாக அமைந்தது. அதேபோல, வாலி ஞானம் பெற வேண்டிய நேரம் வந்தவுடன் அந்த ஞானத்தைத் தரும் பெயரைக் கண்களால் காண வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. எனவேதான் அம்பில் யார் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் விருப்பால் அம்பை இழுத்துப் பார்க்கும் ஆவல் அவனுக்குத் தோன்றிற்று. அப்பெயரைக் கண்டவுடன் தன் வாழ்வில் ஒரு மாற்றம் உண்டாகப் போகிறது என்பதை வாலி அறியான். எப்படியாவது அப்பெயரை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவால் (Curiosity) மட்டுமே அம்பை அவன் இழுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/132&oldid=770643" இலிருந்து மீள்விக்கப்பட்டது