பக்கம்:கம்பன் கலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 123 அவனுடய புறமணத்தில் தோன்றிவிட்டது. அந்த நினைவை வலுவூட்டும் முறையில் நயன தீட்சை நடைபெற்று விட்டது என்பதை அறிவுறுத்தவே கண்களில் தெரியக் கண்டான்' என்று கூறுகிறான் கவிஞன். புறமனத்தில் ஒர் எண்ணம் தோன்றிய பிறகு, நயன தீட்சையால் அது வலுப்பெற்று அகமனத்தில் புகுந்து விட்டாலும், அது வேலை செய்யத் தொடங்கி அவனை முழுவதுமாக ஆட்கொள்ளச் சிறிது காலதாமதம் ஆகத்தான் செய்யும். இந்த இடைக்காலத்தில் புறமனம் (மேல்மனம்) தன் வேலையைச் செய்கிறது. விருப்பு, வெறுப்பு, சினம், ஆத்திரம் முதலியவற்றால் பாதிக்கப் படுகின்றதும், இவற்றின் உறைவிடமாக உள்ளதுமான அவனுடைய மேல்மனம் இப்பொழுது வாலியிடம் வேலைசெய்யத் தொடங்குகிறது. மேல்மனத்தில் மேலாக நிற்பது மான உணர்ச்சியும் அதனுடன் தொடர்புடைய அகங்காரமுமாகும். தான் சுத்த வீரன் என்ற நினைவில் பெரிதும் அகங்காரம் கொண்டிருக்கும் வாலியால் இராமன் செயலை ஏற்க முடியவில்லை. வில் அறம் துறந்த வீரன் (7) என்று இராமனைக் கூறுவதன் மூலம், தான் அதனைத் துறவாதவன் என்று குறிப்பிடுகிறான். 'சூரியன் மரபும் இராமன் தோன்றலால் தொல்லை நல்அறம் துறந்தது (78) என்று நினைத்தவுடன் எல்லையற்ற நாணத்தால் நகைப்பு உண்டாயிற்றாம் அவனுக்கு! இந்த நாணம் காரணமாக வெள்கிட மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும் உள்கிடும்; இதுவும் தான் ஓர் ஒங்கு அறமோ? (79) என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். - இந்த வினாடிவரை அவன் மனத்தில் வெறுப்பு முதலிய உணர்ச்சி எதுவும் தோன்றவில்லை. உண்மை வீரத்தின் அடிப்படையில் பிறந்த நாணமே தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/134&oldid=770645" இலிருந்து மீள்விக்கப்பட்டது