பக்கம்:கம்பன் கலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ல் கம்பன் கலை முன்னர்தான் இராமனை ஏசிய நிலை வருகிறது. ஏசும் பொழுதுகூட அகமனம் அவனை விழிப்படையச் செய்கிறது. அவ்விழிப்பு ஏற்பட்டவுடன் அவன் காணும் காட்சி முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துவிடுகிறது. அவ்விழிப்பு ஏற்படுமுன் சிறப்புடையன, இன்றியமையாதன என்று அவனால் கருதிப் போற்றப் பெற்ற அறவீரம், உயிர் ஆகிய இரண்டும் விழிப்பு ஏற்பட்டவுடன் பொருளற்றவையாக ஆகிவிடுகின்றன. தரையில் நின்று பார்க்கும்பொழுது கண்ணுக்கெட்டாத உயரமுடைய எவரெஸ்ட் சிகரம் 45,000 அடி உயரத்தில் பறக்கும் பொழுது பக்கத்தில் உள்ள சிறு குன்றுடன் வேற்றுமை காண முடியாதபடிச் சிறுத்து விடுகிறது. இவ் வேறுபாடு மலையைப் பொறுத்ததன்று; காண்பான் நிலையைப் பொறுத்து அமைவதாகும். அதேபோல உலகியல் நிலையில் நின்று காணும்பொழுது மிகப் பெரியவை, உயர்ந்தவை என்று கருதப் பெறும் உயிர், பகை, நட்பு, சாவு, வாழ்வு என்பவை பார்வை மாறியவுடன் சிறியவையாகிவிடுகின்றன. துறவிக்கு வேந்தன் துரும்பு' என்ற பழமொழியே இதற்குச் சான்று. வேந்தன் துரும்பாகி விடுவதில்லை. ஆனால் துறவியின் பார்வை மாறி விட்டதால் அரசன் துரும்புக்குச் சமமாகி விடுகிறான். பகை இல்லாதவனைக் கொல்லுதல், நேர் நின்று அறப்போர் செய்தல் என்பன நம் போன்ற மன நிலையுடையார்க்கு மிக மிக உயர்ந்தவை. ஆனால் பேரறிவு விளக்கமும், அக மன விழிப்பும் பெற்ற நிலையில் இவை பொருளற்றவை. காரணம், கொல்வானும் இல்லை. கொல்லப்படுவானும் இல்லை. (கீதை. அத்-2. சுலோ-19) இந்த நிலையை அடைந்து விட்ட வாலி இதோ பேசுகிறான்: தாய்என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/137&oldid=770648" இலிருந்து மீள்விக்கப்பட்டது