பக்கம்:கம்பன் கலை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 9 135 குழம்பிக் கொண்டிருந்த கருணை வள்ளலாகியவனும் அறத்தின் நாயகனுமாகிய இராகவன் அது சரியன்று என்ற முடிவுக்கு வந்துவிட்டான் என்றே தோன்றுகிறது. என்றாலும், நடைபெற்றுவிட்ட ஒன்றுக்கு வேறு என்ன செய்ய முடியும்? எனவே தனக்கு மகன் முறை கொள்ளக் கூடியவனும், தன் அடைக்கலப் பொருளுமாகிய வாலியின் மைந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதன் மூலம் தன் மனத்தில் ஒரு நிறைவை ஏற்படுத்திக் கொள்கிறான். கம்பன் காட்டிய வாலியின் பண்பாட்டை முற்றிலும் அறிந்து கொள்ளும் இயல்புடையவனாகவே கம்பன் கண்ட இராகவனும் காட்டப் பெறுகிறான். இங்குக் கூறிய கருத்துக்கள் கம்பனுடைய வாலிக்கும் இராகவனுக்கும் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய கருத்துக்களாகும். இவ்வாறு வாலியின் மன வளர்ச்சியைக் காட்டாவிடின் அவனுடைய மனமாற்றத்திற்குத் தக்க சமாதானம் கூற முடியாது. அது முடியாமற் போனால் கம்பனுடைய பாத்திரப் படைப்புக்கு இழுக்கு ஏற்படும். எனவேதான் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இந்தப் பாத்திரத்தைப் புது முறையில் படைத்துக் காட்டுகிறான் கவிஞன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/146&oldid=770658" இலிருந்து மீள்விக்கப்பட்டது