பக்கம்:கம்பன் கலை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 விட்டிலன் உலகை அஞ்சி பெரிய செல்வச் சீமானுடைய வீடு. ஒர் அறையில் பெரிய மேசை போடப்பட்டிருக்கிறது. அந்த மேசையின்மேல் பளபளப்பாகத் தீட்டப்பெற்றுள்ள கத்திகள் இரண்டும், பக்கத்தில் ஒரு தட்டில் பழங்களும் வைத்திருக்கிறார்கள். வீட்டுக்காரரும் அவருடைய சிறிய குழந்தை ஒன்றும் மேசையில் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்பெரியவர் மாம்பழத்தை எடுத்துப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியால் அதன் தோலைச் சீவினார். பிறகு பழத்தைத் துண்டுத் துண்டாக நறுக்கினார். குழந்தைக்குக் கொடுத்துவிட்டுத் தாமும் உண்டார். பெரியவர் இத்தனையும் செய்யும்வரையில், அவர் பக்கத்தில் அமர்ந்து, கத்தியையும் நறுக்கும் செயலையும் பார்த்துக் கொண்டே இருந்தது குழந்தை. சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தையைப் போகச் சொல்லிவிட்டுப் பெரியவர் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். சிறிதுநேரம் சென்றவுடன் குழந்தை வீரிட்டுக் கதறியது. பெரியவர் ஓடிவந்து பார்த்தார். குழந்தை கையை வெட்டிக் கொண்டது. ஆம்! அவர் பழம் நறுக்கிய அதே கத்தி குழந்தையின் கையைப் பதம் பார்த்து விட்டது. கத்தியைப் பழம் நறுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு குழந்தைக்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/161&oldid=770675" இலிருந்து மீள்விக்கப்பட்டது