பக்கம்:கம்பன் கலை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் 213 வேறு எந்த இராமாயணத்திலும் இடம் பெறாத இரணியன் வரலாறு, கம்பனிடம் முழுவடிவம் பெற ஒரு காரணம் இருந்திருத்தல் வேண்டும். வேதங்கள் பற்றிக் கூறினாலும், வேதம் என்ற பெயர் தவிர வேதக் கருத்துகள் எதையும் அவன் பயன்படுத்த வில்லை. ஆனால், பிரகதாரண்யகம், முண்டகம், ஸ்வேதாஸ்வதரம் ஆகிய உபநிடதங்களில் பரம்பொருளுக்குக் கூறப் பெற்ற இலக்கணங்களை இரணியன் வதைப் படலத்தில் அற்புதமான கவிதைகளாகப் படைத்துள்ளான். பக்தி இயக்க காலம் என்பது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம், நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்ததாகக் கூறலாம். ஆனால் இந்த இடைக்காலத்தில் அறிவின் அடிப்படையில் தருக்க ரீதியாக இறைவனுக்கு இலக்கணம் கூறும் முயற்சியில் கம்பனைத் தவிர யாரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. - எனவே, காப்பிய அமைப்பில் தனி வழி வகுத்துக் கொண்டது போலவே இறை இலக்கணம் பேசுவதிலும் தனி வழியை வகுத்துக் கொண்டான் கம்பநாடன். எங்கெல்லாம் வாய்ப்பு ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் தன் இறை உணர்வை வெளிப்படுத்த அவன் தவறுவதே இல்லை. சமயிகள் போராட்டம் (சமயங்களுள் போராட்டம் இல்லை) என்பது, மனிதன் சமுதாயமாக வாழத் தலைப்பட்ட நாளிலிருந்தே இருந்திருக்கும் போலும்! கம்பநாடன் காலத்திலும் சைவ, வைணவ, அத்வைத சமயங்கட்கிடையே போராட்டங்கள் இருந்திருத்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரர், பெளத்தர்கள் அறிவு வாதத்தைச் சாட அரும்பாடு படுவதால் அற்றை நாளில் பெளத்தமும் வாதிடும் நிலையில் இருந்திருக்க வேண்டும். அருக சமயமும் வளர்ந்த நிலையில் சமயச் சண்டைகட்கு அளவே இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/224&oldid=770744" இலிருந்து மீள்விக்கப்பட்டது