பக்கம்:கம்பன் கலை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் 217 என்ற திருமங்கை மன்னனின் அற்புதப் பாடலில் தன்னைப் பறிகொடுத்த கவிச்சக்கரவர்த்தி தன் அனுபவத்தை நாமும் பெற வேண்டும் என்ற கருணையால் தன் இராமகாதையில் இதை அப்படியே பாடிவிட்டான். - உணர்ச்சிமயமான இத்தகைய பாடல்களில் கவிஞன் தன்னை மறப்பதிலும் அதைத் தன் பாடல்களில் இடம் பெறுமாறு பாடுவதிலும் வியப்பு ஒன்றும் இல்லை. பக்திமார்க்கத்தின் அடிப்படையிலமைந்த இத்தகைய பாடல்களைக் கவிஞன் கையாள்வதில் வியப்பு இல்லை. இத்துணைத் துரம் பக்தி வயப்பட்ட கவிஞன் ஆழ்வார் பெருமக்கள் கூறும் இறைவனுடைய எளிவந்த தன்மையிலும் (செளலப்பியம்) ஈடுபடுவது நியாயமானதே யாகும். பெருமாள் இராமாவதாரம் எடுத்தது அறந்தலை நிறுத்தவும், தீயோரை ஒறுக்கவும், அன்பர்கட்கு அருளவுமேயாகும். எனினும், மானுடச் சட்டை தாங்கி மானுடர் பெறும் துன்பங்களை ஏற்றுக் கொள்வது அவனுடைய எளிவந்த தன்மையைக் காட்டுவதற்கே யாகும் என்ற கருத்து ஆழ்வார்களின் முற்பட்டு, இளங்கோவடிகள் காலத்திலேயே பெரு வழக்காய் இருந்த ஒன்றாகும். "தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோவரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியோ?" - (ஆய்ச்சியர் குரவை-35) திருமாலின் எளிவந்த தன்மையைச் சிலப்பதிகாரம் பேசுவதைப் போலவே ஆழ்வார்களும் நிரம்பப் பேசியுள்ளனர். இவற்றை எல்லாம் கற்றுத் தேர்ந்த கம்ப நாடன் இறைவனின், இந்தக் குணத்தில் ஈடுபடுகிறான். எனவே, சமயம் வரும்பொழுதெல்லாம் இராமனுடைய அவதாரத்தில் அவனுடைய செளலப்பியம் வெளிப் படுவதாகப் பேசுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/228&oldid=770748" இலிருந்து மீள்விக்கப்பட்டது