பக்கம்:கம்பன் கலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கம்பன் கலை வியப்பு ஒன்றும் இல்லை. தள்ள அரிய பெரு நீதித்தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனத்தக்க பரதனைத் தசரதன் சரியாகப் புரிந்து கொள்ளாதது மட்டுமன்று தவறாகவே புரிந்து கொண்டிருந்தான். இதன் காரணம் யாதாக இருத்தல் கூடும்? தசரதன் ஒரு சாதாரண சராசரி மனிதனே யாவான். சாதாரண மனிதனுக்கு உரிய விருப்பு வெறுப்புகள், கோப தாபங்கள் ஆகிய அனைத்தும் அவனிடம் நிறைந்திருந்தன. கதை கூறுகிற சமதிருஷ்டி உடையவர்களாகிய இராமன் முதலிய நால்வரை அவன் அறிந்துகொள்ள முடியாமற் போனதில் வியப்பு ஒன்றும் இல்லை. எனவேதான் இந்நால்வரினும் வேறுபட்ட பண்புடைய சகோதரர் சிலரை, தசரதன் புரிந்து : கொள்ளக்கூடிய சிலரை, ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இராமனுக்கு ஏற்பட்டு விடுகிறது. இராமன் சோதரராக ஏற்றுக்கொண்ட மூவரும் மூன்று துருவங்களில் உள்ளவர்கள். கல்வி வாசனையே இல்லாதவன் குகன் (உணர்ச்சி), 'உம்பரின் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தை உடையவன் வீடணன் (அறிவு); இவ்விருவருக்கும் இடைப்பட்டவனாக்க் காட்சி தருகிறான் சுக்ரீவன் இரண்டின் கலப்பு. பரம்பொருளாகிய இராமன் இந்த மூவரை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணம் யாது? இறைவனிடம் அடிமை பூண்ட உயிர்கள் அனைத்தும் இந்த மூன்று வகையினுள் அடங்கும். இந்த மூன்றையல்லாத வேறு ஒரு வகை உண்டு என்று ஆராய்ச்சி அறிவும், மனோதத்துவ விஞ்ஞானமும் மிகுந்துள்ள இக்காலத்தில்கூடக் காட்ட இயலாது. இம்மூன்று வகையினரையும் பரம்பொருள் ஏற்றுக் கொள்கிறான். இம்மூன்று வகையான மனநிலைகளையும் அவற்றின் அடிப்படையையும், அவை தொழிற்படும் முறையையும் விரித்துக் கூறுவதற்காகவே கவிச்சக்கரவர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/30&oldid=770765" இலிருந்து மீள்விக்கப்பட்டது