பக்கம்:கம்பன் கலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன் ? 27 வேண்டுமெனில் அவன் பிறவியைப் போக்கக் கூடியவனாகத்தான் இருத்தல் வேண்டும் என்பது வீடணன் தன் ஞானத்தால் கண்ட உண்மை. இனி இராமனிடம் அழைத்துச் செல்லப்படும் நேரத்தில் கூட அவனுடைய முக, மன பாவங்களைக் கூறும் கவிஞன், வழிந்த கண்ணிருடன் செல்கிறான். என்று மட்டும் கூறாமல், 'அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்துக் காட்ட’ (188) என்று கூறுவதால் வீடணன் தன் ஞானத்தால் பரம்பொருளின் இயல்பையும் கருணையையும் அறிந்ததுடன் அதனால் தான் அடையப்போகும் பேற்றையும் நன்கு விளங்கிக் கொண்டிருந்தான் என்பதைக் கவிஞன் சுட்டிச் செல்கிறான். இராமன் மாட்டு வீடணன் கொண்ட அன்பு (பக்தி) தன்னுடைய பிறவியைப் போக்கிக் கொள்ளவும், அப்பரம்பொருளை ஒரளவு அறிந்து கொள்ளவும் வழியாகப் (சாதனமாக பயன்பட்டதே தவிர அந்த அன்பைக் குகனைப் போலப் பயனாகக் (சாத்தியமாக கொள்ளவில்லை என்பது தெளிவு. குகனிடம் இத்தகைய பக்தி வளர்வதற்கு இயற்கையாகவே அவனிடம் அமைந்திருந்த ஞானம் உதவி இருக்கலாம். வீடணனிடம் இந்த ஞானம் வளர்வதற்கு இயற்கையாக அவனிடம் அமைந்திருந்த பக்தி உதவி இருக்கலாம். குகன் பக்தியை சாத்தியமாகவும், வீடணன் பக்தியைச் சாதனமாகவும் கொண்டனர். இருவரையும் வள்ளல் தன் மாட்டு எடுத்துக் கொள்வதால், இந்த இரண்டு வழிகளுமே இறைவனுக்கு உகந்தவை என்பது தெளிவு. - - ஆனால் இவர்கள் இருவரும் மேற்கொண்ட வழிகள் சாதாரண மனிதர்கள் மேற்கொள்ள முடியாத சர்வ பரித்யாகம் அடிப்படையானது. எனவே அவை சாதாரண மனிதர்கள் எளிதில் கைக்கொள்ளக்கூடியன அல்ல. அப்படியானால் சாதாரண நம் போன்ற சராசரி மனிதன் இறையருளை நாடவே முடியாதா என்று ஐயங் கொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/35&oldid=770770" இலிருந்து மீள்விக்கப்பட்டது