பக்கம்:கம்பன் கலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கம்பன் கலை என்றுதான் தொடங்குகிறான் என்றாலும், சுக்கிரீவன் வாலியைக் கொல்லக்கூடியவன் என்று யாரையும் நினைத்து நம்பிவிட மாட்டான் என்பதையும் அனுமன் நன்கு அறிந்திருந்தான். எனவே, தாடகையையும் சுவாகுவையும் கொன்றவன் (6), சிவனுடைய திரியம்பகம் என்னும் வில்லை முரித்தவன் (), பரசுராமனை வென்றவன் (8), கரனையும் அவன் படையையும் ஒருவனாகவே நின்று அழித்தவன் (10), கவந்தனைக் கொன்றவன் (13) என்றெல்லாம் காரணத்துடன் இராமன் வல்லமையை விளக்குகிறான். இதில் ஒருவேளை சுக்கிரீவனுக்குத் தெளிவு பிறந்தாலும் மற்றோர் ஐயம் உடனே தோன்றிவிடும். இராமன் வாலியை வென்றால் அவனுடைய அரசைத் தான் கைப்பற்றிக் கொள்வானே தவிர, வாலி தம்பியாகிய தனக்கு அதனால் என்ன பயன் விளையும் என்று. ஐயுறுவான் இராமனுடைய நட்பால் தனக்கு எவ்விதப் பயனும் ஏற்படாது என்ற முடிவுக்கும் வந்துவிடுவான். இந்த ஐயத்தை அவன் உறுதியாகப் பெறுவான் என்பதைச் சொல்லின் செல்வனாகிய மாருதி நன்கு அறிந்துள்ளான். ஆதலின் ஒரு பாடலில், வாய்விட்டுக் கேட்கப்படாத ஐயத்திற்கு விடை கூறுகிறான். இராமன் பிறர் மண்ணைக் கவரும் இயல்புடையவன் அல்லன், ஏன் எனில், தனக்கு உரிமையாக இருந்த மண்ணையே தன் தம்பிக்கு அன்புடன் உதவிவிட்டுச் சிற்றவையின் பணியைத் தலைமேற்கொண்டு கானகம் வந்துள்ளான் என்பதையும் விரிவாகக் கூறுகிறான் மாருதி: "உளைவயப் புரவியான் உதவஉற்று, ஒரு சொலால் அளவுஇல் கற்புடைய சிற்றவை பணித்தருளலால் வளையுடைப் புணரிசூழ் மகிதலத் திருஎலாம் இளையவற்கு உதவி, இத் தலைஎழுந் தருளினான்" (நட்பு-8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/45&oldid=770781" இலிருந்து மீள்விக்கப்பட்டது