பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


சித்தாசரமத்திலே ஆறு நாள் வேள்வி செய்தார் விசுவாமித்திரர். விண்ணவர் பொருட்டு விசுவாமித்திரன் செய்த, செயற்கரிய, எண்ணுதற்கும் அரிய இந்த வேள்வியைக் காத்தனர். யார்? மன்னன் மைந்தர்; மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர். அதாவது இராமனும் இலட்சுமணனும். எப்படிக் காத்தனர்? கண்ணினைக் காக்கின்ற இமைபோல் காத்தனர். கண் வேள்வி. இமை. இராம இலட்சுமணர். இமைகள் இரண்டு. மேல் இமை, கீழ் இமை, கீழ் இமை அசையாதிருப்பது. மேல் இமை அசைவது. இவ்வாறே இலட்சுமணன் வேள்விச் சாலையின் வாயில் நின்று காத்தான். இராமன் வேள்விச் சாலையைச் சுற்றி வந்து சுற்றி வந்து காத்தான். இலட்சுமணனைத் தொட்டுத் தொட்டு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தான்.

இவ்வாறு மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர் கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்.

𝑥𝑥𝑥𝑥

கண்ணினை — பூமியை; காக்கின்ற — அரசாளும்; மன்னவன் மைந்தர்கள் — தசரத மன்னனின் மைந்தர்கள்: விண்ணவர்க்கு — தேவர்களின் பொருட்டு; இரண்டு மூன்று நாள் — ஆறு நாட்கள்; முனிவன் ஆக்கிய — விசுவாமித்திர முனிவன் செய்த எண்ணுதற்கு — நினைப்பதற்கும்; ஆக்க — செய்வதற்கும்; அரிது — அரியதாகிய; வேள்வியை — யாகத்தை : கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர் — கண்களைக் காக்கும் இமைபோல் காத்தனர்.

𝑥𝑥𝑥𝑥