பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


திகம்பர ஜைனராகிய குணபத்திரர் என்பவர் தம் பிரிவுக்கு ஏற்ப இராமகாதையை அமைத்துக் கொண்டார். இவையாவும் வால்மீகி இராமாயணத்துக்குப் பின் தோன்றியவை என்பது அறிஞர் கருத்து.

புராணங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை பதினெட்டு. இவற்றுள் பலவற்றில் இராம கதையைக் காண்கிறோம். ஆயினும் இவை பல்வேறு மாறுதல்களுடன் காணப்படுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் காணப்படும் இராமகதைதான் அத்யாத்ம ராமாயணம் என்ற பெயரில் விளங்குகிறது.

திபேத், துருக்கி, இந்தோனேசியா ஜாவா, இந்தோ-சீனா, சையாம், பர்மா, முதலிய நாடுகள் பலவும் தங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்ப இராம கதையை அமைத்துக் கொண்டுள்ளன.


தமிழ் நாட்டில்

மிழ் நாட்டுக்கு வருவோம். கம்பர்தான் இராமாயணத்தை வட நாட்டிலேயிருந்து இறக்குமதி செய்தாரா? அல்லது அவருக்கு முன்பே இராமகாதை தமிழ் மக்கள் அறிந்த ஒன்றா? இது கேள்வி. விடை காண முயல்வோம்.

தமிழ் மொழியிலே மிகப் பழம் பெரும் காப்பியங்கள் என்று சொல்லப்படுவன ஐந்து. அவை முறையே சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பனவாகும். இந்த ஐந்திலே ஒன்று சிலப்பதிகாரம்.