பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


“அந்த கங்கை நீரைக்‌ கொண்டு வந்து உனது முன்னோரின்‌ சாம்பலை அதிலே கரைத்தால்‌ அவர்கள்‌ நல்ல கதி அடைவர்கள்‌.”

கேட்டான்‌ பகீரதன்‌, அரசைத்‌ தன்‌ மந்திரிகளிடம்‌ ஒப்புவித்தான்‌. காடு சென்றான்‌. பிரமனைக்‌ குறித்துத்‌ தவம்‌ செய்தான்‌.

நீண்டகாலம்‌ தவம்‌ செய்தான்‌. முடிவில்‌ பிரம தேவன்‌ தோன்றினான்‌. கங்கையைப்‌ பூமிக்கு அனுப்புமாறு வேண்டினான்‌ பகீரதன்‌. அப்போது பிரமன்‌ சொன்னான்‌.

“உனது விருப்பப்படியே கங்கையைப்‌ பூமிக்கு அனுப்புகிறேன்‌. கங்கை பூமியில்‌ விழும்போது அவளுடைய வேகம்‌ தாங்கமாட்டாள்‌ பூமி. கங்கைமின்‌ வேகம்‌ தாங்கும்‌ சக்தி படைத்தவர்‌ ஒருவரே. அவரே சிவபெருமான்‌, கங்கை பூமிக்கு வரும்‌ போது அவளது வேகத்தைத்‌ தாங்கிக்கொள்ள அவர்‌ சம்மதித்தால்‌ கங்கை வருவாள்‌.”

இவ்வாறு கூறினார்‌ பிரமதேவன்‌. எனவே பகீரதன்‌ சிவபெருமானைக்‌ குறித்துத்‌ தவம்‌ செய்தான்‌. நீண்ட காலம்‌ தவம்‌ செய்தான்‌. முடிவில்‌ சிவபெருமான்‌ தோன்றினார்‌.

“கங்கை பூமிக்கு வர வேண்டும்‌” என்று கேட்டான்‌ பகீரதன்‌.

“அப்படியே ஆகட்டும்‌!” என்று வரமளித்தார்‌ சிவன்‌.

மிக்க கர்வத்துடனும்‌ வேகத்துடனும்‌ வானிலிருந்து கீழே வீழ்ந்தாள்‌ கங்கை. அவளைத்‌ தன்‌ சடையிலே ஏந்தினார்‌ சிவன்‌. ஒரு சிறிதும்‌ கீழே விழாமல்‌ சடையை முடித்து விட்டார்‌.