பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

ஆகிய ; கவி இன்பம்–கவிகளின் இன்பமும் (ஆகியவற்றின்) பொலிவே போல்—விளக்கமே போல ; கன்னி—கன்னியாகிய சீதா தேவி தங்குகிற; மாடத்து–கன்னியாமாடத்து உம்பரின் மாடு—மேலே ஒரு பால் ; அன்னம்—ஆண் அன்னங்கள் ; களிபேடு ஓடு ஆடும் — மகிழ்ச்சிக்குரிய பெட்டைகளுடனே குலாவுகின்ற ; முன் துறை கண்டு–நீர்த்துறை அமைந்த முன் இடத்தைக் கண்டு ; அங்குஅவ்விடத்தே ; அயல்—அம்மாளிகையின் பக்கமாக ; நின்றார் — மூவரும் நின்றனர்.

𝑥𝑥𝑥𝑥

பொன் சேர் மென் கால்
       கிண்கிணி மார்பம் புனையாரம்
கொன் சேர் அல்குல் மேகலை
       தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில்
       காணச் சத கோடி
மின் சேவிக்க மின்னரசு
       என்னும் படி நின்றாள்.

அங்கே சீதா தேவி நின்றாள், எப்படி நின்றாள் ? அழகிய கால்களிலே சதங்கை அணிந்து நின்றாள் ; மார்பிலே மணி மாலையும், மலர் மாலையும் அணிந்து நின்றாள். இடையிலே மேகலாபரணம் அணிந்து நின்றாள்.

தோழிமார் பலர் அவளைச் சூழ்ந்து நின்றனர். சீதையின் அழகைப் பாராட்டி நின்றனர்.

அது எப்படி இருந்தது ? கோடிக் கணக்கான மின்னல்கள் வணங்க மின் அரசு நிற்கிறது என்று சொல்லும் வண்ணம் நின்றாள்.