பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

 மேற் கண்டவற்றால் என்ன தெரிகிறது?

இராம கதை தமிழ் மக்களுக்குப் புதியது அன்று, கம்பருக்குப் பலநூறு ஆண்டுகள் முந்திய காலத்திலேயே தமிழ் மக்கள் அறிந்த ஒன்று. அத்தகைய கதைக்குக் காவிய வடிவம் தந்தார் கம்பர்; கவிச்சக்கரவர்த்தி ஆனார்,

உலக மகா கவியாகிய ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல; அவற்றுள் ஒன்று ஹாம்லெட், சிறந்த சோக நாடகம் என்று ஆங்கில இலக்கிய உலகம் ஒப்புக்கொண்ட ஒன்று. இந்த நாடக பாத்திரப் படைப்புகளை ஆங்கிலப் புலமை மிக்கவர்கள் வியந்து வியந்து பாராட்டுகிறார்கள். ஹாம்லெட் கதை நிகழ்ச்சி ஷேக்ஸ்பியர் காலத்தது அன்று. டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளில் நாடோடியாக மக்களிடையே வழங்கி வந்த மிகப் பழங்கால நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு தாம் சொல்ல விரும்பிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார் ஷேக்ஸ்பியர். அதே போலத் தாமும் செய்துவிட்டார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

தமிழ் மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக நாடோடி கதையாக வழங்கி வந்த இராம காதையை எடுத்துக் கொண்டார். வால்மீகியைத் தழுவிக் கொண்டார். தாம் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டார்.

கம்பர்

ம்பர் என்பது இவருக்கு இடப்பெற்ற இயற்பெயரே. வேறு எந்தக் காரணம் பற்றியும் இப்பெயர் இவருக்கு வரவில்லை.

கம்பர் என்பது திருமாலின் பெயர். கம்பத்திலே தோன்றியவர் கம்பர். கம்பத்திலே திருமால் தோன்றியது ஏன்? எப்போது?