பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175


பூ மழை பொழிந்தனர்
        புகுந்த தேவர்கள்
வாம வேல் வருணனை
        மான வெஞ்சிலை
சேமி என்று அளித்தனன்
        சேனை ஆர்த்தெழ
நாம நீர் அயோத்திமா
        நகர நண்ணினான்.

இந்த நிகழ்ச்சி காண வானத்திலே கூடியிருத்த தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள். அப்போது இராமன் வருணனை அழைத்து அந்த வில்லைப் பத்திரமாக வைக்கும்படி கூறினான்.

சேனைகள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யப் புறப்பட்டு அயோத்தி மா நகர் அடைந்தான்.

𝑥𝑥𝑥𝑥

புகுந்த தேவர்கள் – அச்சமயம் ஆகாயத்திலே கூடியிருந்த தேவர்கள்; பூ மழை பொழிந்தனர்—மலர் மாரி பொழிந்தனர். (அப்போது இராமன்) வாமம் வேல் வருணனை —அழகிய வேல்படை கொண்ட வருணனிடம் – மானவம் சிலை; பெருமை மிக்க இந்த வில்லை; சேமி—பத்திரமாக வைத்திரு; என்று—என்று அளித்தனன்—கொடுத்து விட்டு; சேனை ஆர்த்து எழ—படைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; நாமம் நீர்—அச்சம் தரும் அகழி நீர் சூழ்ந்த; அயோத்தி மாநகர ; அயோத்தி மா நகரை; நண்ணினான் — அடைந்தான்.

𝑥𝑥𝑥𝑥