பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

திருப்பாதிரிப்புலியூரிலே இருந்த சமண மடம் ஒன்று புகழ் பெற்று விளங்கியது. ‘லோக விபாகம்’ என்ற சமண நூல் இந்த மடத்திலிருந்தே தோன்றியது.

சிம்மசூரி, சர்வதந்தி என்ற சமணப் புலவர்கள் சமஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் வல்லவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்தான் மகேந்திரவர்மன்.

இங்கிருந்து தான் தமிழ்நாட்டில் சைவ சமணப்போர் தொடங்குகின்றது. சைவராக இருந்த திருநாவுக்கரசர் சமணர் ஆனார்; மீண்டும் சைவர் ஆனார். அவரைப் பலவாறு துன்புறுத்தினான் மகேந்திரப் பல்லவன், பின்னே திருநாவுக்கரசரின் பெருமையறிந்தான்; தானும் சைவன் ஆனான். இது அவன் ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்கள். பின்னே இவன் கோயில்கள் பல கட்டினான். இவனுடைய ஆதரவு பெற்ற திருநாவுக்கரசர் சைவம் தழைக்கப் பாடுபட்டார்.

இவருடைய காலம் கி. பி. 570 முதல் 655 வரை ஆகும்.

மகேந்திர வர்மனுக்குப் பிறகு அவனது மகன் நரசிம்மவர்மன் அரசன் ஆனான். இவன் மாமல்லன் என்றும் அழைக்கப்பட்டான்.இவனுடைய காலத்திலேதான் திருஞான சம்பந்தர் தோன்றினார் சைவ சமணப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.

சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக் காலம் இது எனலாம்.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடிய தேவார திருப்பதிகங்கள் ஆருயிரத்துக்கும் மேற்பட்டவை. தமிழ்நாட்டிலே சமண சைவப் போராட்டத்தின் முக்கியமான கால கட்டம் இதுவே.