பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23



கம்பர் காட்டும்
சமதர்ம சமுதாயம்

ரசியல் பொருளாதாரம் சமூகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தவை. நல்ல சமூகம் ஒன்று அமைதல் வேண்டுமானால் அந்த சமூகத்தின் பொருளாதாரம் நன்றாயிருக்க வேண்டும். இவ்விரண்டும் நன்றாக இருக்க வேண்டுமானால் ஆட்சி நல்லதாக இருந்தால் தான் அரசியல் நன்றாயிருக்கும்.

அரசியல் நன்றாயிருந்தால் தான் ஆட்சியும் நன்கு அமையும். ஆட்சி நன்கு அமையுமானால் தான் நாட்டு மக்களின் பொருளாதாரம் வளம் பெறும், நாட்டு மக்களின் பொருளாதாரம் வளம் பெறுமாயின் நல்லதொரு சமூகம் அமையும். ஆகவே, அரசியல், பொருளாதாரம், சமூகம் இந்த மூன்றும் இணைந்தவை.

நல்லாட்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். நல்ல சமூகம் என்பது ஒரு நாளில் ஏற்படக் கூடியது அன்று; சில ஆண்டுகளில் ஏற்படக் கூடியதும் அன்று. தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பல ஆண்டுகள் நல்ல ஆட்சி நடைபெறவேண்டும். அப்படி நடைபெறுமானால் நல்லதொரு பொருளாதார அமைப்பு நாட்டிலே வேர் கொள்ளும். நல்லதொரு பொருளாதார அமைப்பு நாட்டிலே வேர் விடுமானால் நல்லதொரு சமுதாயம் அமையும். நல்ல சமுதாயம் அமையுமானால் நாடு நன்றாயிருக்கும். இஃது அடிப்படை. இந்த அடிப்படையைக் கம்பன் சுட்டிக் காட்டுகிறான்.

கோசல நாட்டை ஆண்ட அரசர்கள் சூரிய வமிசத்தினர்; அவர் யாவரும் வழி வழியாக - தலைமுறை தலைமுறையாக - நல்ஒழுக்கம் பூண்டவர்கள்.