பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

காரணமாக உணவு தயாரிக்க முடியாது போனாலும் சரி, பசி வந்த நேரத்தில் சிறிதும் கலங்க வேண்டுவது இல்லை. பசி வந்தால் புசிக்கலாம். எவரையும் கேட்க வேண்டுவது இல்லை, யாசிக்க வேண்டாம். பல்லைக் காட்ட வேண்டாம். நேராக அன்ன சத்திரத்திலே சென்று உணவு பெறலாம். உணவு சத்திரங்கள் எல்லாம் பொது உடைமை. எவ்விதமான குற்றமும் இல்லாமல் நன்கு நடைபெற்று வந்தன. இத்தகைய அன்ன சத்திரங்கள் பல அங்கே இருந்தன.

இஃது ஓர் அன்ன சத்திரம், எக்காட்சி வழங்குகிறது? இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள் மனை கொண்டு நறுக்கப்பட்ட காய் கனிக்குவியல் ஒரு பக்கம், பருப்புக்குவியல் இன்னொரு பக்கம். நிறைந்த வெண்முத்துப் போன்ற அன்னக் குவியல் இன்னொரு பக்கம்.


பிறை முகத்தலைப் பெட்பின் இரும்புபோழ்
குறை கறித்திரள் குப்பை பருப்பொடு
நிறை வெண்முத்தின் நிறத்து அரிசிக்குவை
உறைவ கோட்டமில் ஊட்டிடம் தோறெலாம்

கோசல நாட்டின் இயற்கை வளம் பற்றிச் சொன்னார் கம்பர்; அந்நாட்டு மக்களின் பொருள் வளம் பற்றிச் சொன்னார், பின் அவர்களுடைய கல்வி பற்றிச் சொன்னார். அவர்களுடைய பிள்ளைகளின் விளையாட்டு பற்றிச் சொன்னார். அந்நகர மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொன்னார். அவர்களது சாப்பாட்டைப் பற்றிச் சொன்னார். இவை எல்லாம் நிரம்பிய பிறகு எதிலே நாட்டம் செல்லும் ? கலைகளிலே. எனவே அவர்களது கலைத்திறன்—கலைவாழ்வு—பற்றிச் சொல்கிறார்.

ஆங்காங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தனவாம். சங்கீதக் கச்சேரி என்றால் எப்படி? தோல் கருவி துளைக் கருவி முதலிய வாத்தியங்கள் அதாவது மிருதங்கம் புல்லாங்குழல் - கஞ்சிரா-