பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கொள்ளல் முதலியன இவை இல்லாமையாலேயும் கவலையற்ற வாழ்க்கையாலும் எமனுக்கு அங்கே வேலை இல்லை. இயற்கையாக எய்தும் மரணம் தவிர வேறு எதுவுமில்லை. அதாவது அகால மரணம் இல்லை. சிசு மரணம் — அதாவது குழந்தைச் சாவு இல்லை. கருச்சிதைத்தல் போன்றன இல்லை.


கூற்றம் இல்லை ; ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை ; தம் சிந்தையில் செவ்வியால்
ஆற்றல் நல் அறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.

இப்படியாக - ஓர் ஆன்மீக சோஷலிச - சமதர்ம சமுதாயம் கோசல நாட்டிலே இருந்தது என்று சொல்கிறார் கம்பர்.

நிலம் வளமுடையதாக இருந்தால்தான் அதில் விளையும் பயிரும் செழிப்பாயிருக்கும். வளமற்ற பூமியிலே பயிர் செழிக்காது.

அதே போல சமுதாயம் நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயத்திலே நல்லவர்கள் தோன்றுவார்கள்; உயர்ந்த எண்ணங்கள் கொண்டோர் தோன்றுவர்; சிறந்த குணங்கள் மிக்கோர் தோன்றுவர்; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இத்தகைய சமுதாயத்திலேதான் தோன்றுவர்.

சமுதாயச் சூழ்நிலையே ஒரு மனிதனை உருவாக்குகின்றது. நல்ல சமுதாயத்திலே நல்லோர் தோன்றுவர்.

இந்த அடிப்படை தத்துவத்தைக் கூறி, அதன் அடிப்படையில் தனது காவிய மாளிகையை எழுப்புகிறார் கம்பர்.

இனி மாளிகையின் உள்ளே போவோம். ஆங்குள்ள அழகிய சித்திரங்களைக் காண்போம்.

தொகுப்பாசிரியர்கள்.