பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முடிவில்லாத விளையாட்டு திருவிளையாடலை உடையார்—உடையவராகிய; அவர்—அவ்வொருவரே தலைவர் நம் தலைவர்; அன்னவர்க்கே சரண்–நாங்கள் அந்த ஒருவரையே நாம் சரண் அடைவோம்.


ஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு; அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்

அநுமனுக்கு வணக்கம் தெரிவிக்கும் பாடல் இது. அஞ்சிலே ஒன்று பெற்றவன் எவன்? ஆஞ்சநேயன்; அநுமன். ஐந்து என்பது அஞ்சு என வழங்கப்பட்டது. ஐந்து எவை? ஐம்பெரும் பூதங்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன. இவை முறையே பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன.

அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று பெற்றவன் என்று பொருள். வாயு புத்திரன்; காற்றுத் தேவன் மைந்தன் என்பன அநுமனின் பெயர்கள்.

அநுமன் என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்றைத் தாவினான். அஞ்சிலே ஒன்று எது? நீர். அதாவது கடல். கடலைத் தாவினான் அநுமன்.