பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51



சரயு என்று சொல்லப்பட்ட அந்த ஆற்றின் நீர் எங்கெல்லாம் பாய்ந்தது? மகரந்தம் சிந்துகின்ற சோலை தோறும் சென்று பாய்ந்தது; சண்பகத் தோட்டங்கள் தோறும் பாய்ந்தது; பொய்கைகள் தோறும் பாய்ந்தது; பாக்குத் தோட்டங்களுக்கெல்லாம் சென்று பாய்ந்தது வயல்களில் எல்லாம் பாய்ந்தது. இப்படியாக உடம்பு முழுவதும் உயிர் உலாவுவது போல சரயு நதியின் தண்ணீர் எங்கும் பாய்ந்தது.

தாது உகு சோலை தோறும் – மகரந்தம் சிந்துகின்ற சோலைகளில் எல்லாம் ; சண்பகக் காடு தோறும் – சண்பக வனங்களில் எல்லாம் ; போது அவிழ் — அரும்புகள் மலரப் பெற்ற ; பொய்கை தோறும் —பொய்கைகளில் எல்லாம்; புது மணம் — புதிய மணம் வீசுகின்ற தடங்கள் தோறும் — தடாகங்களில் எல்லாம்;மாதவி வேலி — குருக்கத்திக் கொடிகளை வேலியாகக் கொண்ட ; பூக வனம் தோறும் — பாக்குத் தோட்டங்கள் எல்லாம் ; வயல்கள் தோறும் — வயல்களில் எல்லாம்; ஓதிய உடம்பு தோறும் உயிர் என — உடம்பு முழுவதும் உயிர் உலாவுவது போன்று; உலாயது — சரயு நதியின் நீர் சென்று உலாவியது.

நீரிடை உறங்கும் சங்கம்;
     நிழலிடை உறங்கும் மேதி ;
தாரிடை உறங்கும் வண்டு ;
     தாமரை உறங்கும் செய்யாள் ;
தூரிடை உறங்கும் ஆமை ;
     துறையிடை உறங்கும் இப்பி ;
போரிடை உறங்கும் அன்னம் ;
     பொழிலிடை உறங்கும் தோகை.