பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பட்ட வயல்கள் எங்கும்; பவளம்–சாலிப் பரப்பு எலாம்—நெல் பயிராகிப் பரந்துள்ள இடங்களில் எல்லாம்; அன்னம்–அன்னப் பறவைகள்.

லை வாய்க் கரும்பின் தேனும்
       அரிதலைப் பாளைத் தேனும்
சோலை வாய்க் கனியின் தேனும்
       தொடை இழி இறாலின் தேனும்
மாலை வாய் உகுத்த தேனும்
       வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை வாய் மடுப்ப உண்டு
       மீன் எலாம் களிக்கும் மாதோ !

கரும்பு ஆலைகளிலிருந்து பாய்கின்ற கரும்புச்சாறும், பாளைகளை நுனி சீவுதலால் அவற்றிலிருந்து வடிகின்ற கள்ளும் ஒன்று கலந்து பெருகி ஓடுகின்றன.

மலை உச்சியிலே உள்ள தேன் அடை மீது வேடர்கள் அம்பு எய்து தேன் எடுக்கிறார்கள். எப்படி எடுக்கிறார்கள்? அம்பிலே நூலைக்கட்டி வீசுகிறார்கள். அம்பு தேன் அடை மீது பாய்ந்து சொருகி நிற்கிறது. நூல் வழியே தேன் சொரிகிறது.

ஆடவரும் மகளிரும் அணிந்துள்ள மலர் மாலைகளில் இருந்தும் தேன் வழிகிறது. இப்படி வழியப் பெற்ற தேன் ஒன்றாகி, ஆறு போல் பெருகி, மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கடலில் கலக்கிறது.