பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86



கணக்கிட முடியாத அரிய தவம் பல செய்தவன் விசுவாமித்திர முனிவன். அம்முனிவன் சொன்ன சொல் எப்படியிருந்தது?

வேல்பட்ட புண்ணிலே வெந்தீ பாய்ந்தது போல இருந்தது. மார்பிலே ஒரு புண். வேல் பாய்ச்சியதாலே ஏற்பட்ட புண். அந்தப் புண்ணிலே ஒரு கொள்ளிக்கட்டை கொண்டு சுட்டால் எப்படியிருக்கும்?

அப்படி இருந்தது தசரதனுக்கு. துயரம் பொங்கி எழுந்தது. உயிர் ஊசலாடிற்று. துடித்தான் மன்னன்.

பிறவிக்குருடன் ஒருவன் திடீரென்று பார்வை பெற்றான்; மகிழ்ந்தான்.

அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை மீண்டும் கண் இழந்தான் அவன்; துயரத்தில் ஆழ்ந்தான். அவனைப் போலப் பெருந்துயரத்தில் ஆழ்ந்தான் மன்னன்.

பிள்ளை வேண்டுமென்று பெரு வேள்வி செய்தான். பிள்ளைகளைப் பெற்றான். பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.

பிள்ளையைப் பிரியும்படி முனிவன் சொன்ன சொல் அவன் கண்ணைப் பிடுங்குவது போலிருந்தது. துயரத்தில் அழ்ந்தான். “கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்” என்கிறார் கம்பர்.

𝑥𝑥𝑥𝑥

எண் இலா—எண்ணிக்கையில் அடங்காத; அருந்தவத்தோன்—அரிய தவங்கள் செய்த விசுவாமித்திர முனிவர்; இயம்பிய—கூறிய; சொல்—சொல்லானது; மருமத்தில்—மார்பிலே; எறிவேல் பாய்ந்த—வேல் பாய்ச்சியதால் ஏற்பட்ட