பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

எடுத்துக் கொண்டவள் (அவள்); வதனம்– அவளது முகம்; கஞ்சத்தின் அளவிற்றேனும்– தாமரை மலர் அளவினது ஆயினும்; கண்கள்– அவளுடைய கண்கள்; கடலினும் பெரிய– கடலை விட அகன்று ஆழமானவை; பெரியவை; அளக ஓதி– முன்னே குழைந்து விளங்கும் கூந்தல்; மஞ்சு ஒக்கும்– மேகம் போலிருக்கும்; வடித்த கூந்தல்– பின்னே வாரி முடித்துத் தொங்க விடப்பட்ட கூந்தலோ; மழை ஒக்கும்– நீருண்ட கருமேகம் போலிருக்கும்; அடிகள்– அவள் பாதங்களோ; பஞ்சு ஒக்கும்– செம்பஞ்சு போலிருக்கும்; விரல்கள்– அவளுடைய விரல்கள்; செய்ய பவளத்தை ஒக்கும்– சிவந்த பவளம்போல் இருக்கும்.

வில் ஒக்கும் நுதல் என்றாலும்
        வேல் ஒக்கும் விழி என்றாலும்
பல் ஒக்கும் முத்து என்றாலும்
        பவளத்தை இதழ் என்றாலும்
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வா ஆல்
        சொல்லலாம் உவமை உண்டோ?
நெல் ஒக்கும் புல் என்றாலும்
        நேர் உரைத்தாக வற்றோ?

அவளுடைய புருவங்கள் விற்போன்றவை என்று சொன்னாலும், விழிகள் வேல் போன்றவை என்று சொன்னாலும், முத்துப்போன்ற பற்கள் என்று சொன்னாலும், பவளம் போலும் உதடுகள் என்று சொன்னாலும் சொல் பொருந்துமே அன்றிப் பொருள் பொருந்தாது. உவமை சொல்லக் கூடியது எதுவுமே இல்லை. புல்மாதிரி இருக்கும் நெல் என்றால் அது சரியாகுமா?