பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சீதையை அடைய விரும்புகிறான். சீதையை மாயத்தால் தூக்கி வரத் தீர்மானிக்கிறான். அதற்குத் தன் மாமன் மாரீசனின் துணையினை நாடுகிறான். மாரீசனின் இருக்கை தேடிச் செல்கிறான், தனியனாக அவ்வாறு தனியனாக வந்த இராவணனைக் கண்டு மருள்கிறான் மாரீசன். ஏன்? இராவணன் வருகையால் தனக்கு எவ்விதத் துன்பம் நேருமோ என்று அஞ்சுகிறான் மாரீசன். அச்சத்தால் மருள்கிறான். “தேவர் கோனும் தென் திசைக்கோனும் அஞ்ச ஆட்சி புரியும் ஒருவனே! இந்தக் காட்டிலே உள்ள எளியவனாகிய எனது இருக்கைக்குத் தனியனாக வந்திருக்கிறாய், வருகையின் உட்கருத்து என்ன? சொல்” என்று கேட்கிறான். அப்போது இராவணன் சொல்கிறான்;

மருள்கின்றான் - (இராவணன் தன்னிடம் வந்தது என்ன தீமை செய்யக் கருதியோ?) என்று அஞ்சி மயங்கினவனாகிய மாரீசன் (அந்த இராவணனை நோக்கி) சந்தம் மலர் தண் கற்பக நீழல் - அழகிய மலர்களை உடைய குளிர்ந்த கற்பக விருட்சங்களின் நிழலில் அமர்ந்து வானுலகை ஆட்சி செய்யும்; தலைவர்க்கும் - தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - யமனுக்கும்; அஞ்ச அடுக்கும் - அஞ்சும்படி ஆணை செலுத்தும்; அரசு ஆள்வாய் - அரசு செலுத்துகிறவனே;

(நீ) இந்த வனத்து - இந்தக் காட்டிலே; என் இன்னல் இருக்கைக்கு - துன்பத்துக்கிடமான எனது இருப்பிடத்துக்கு; எளியோரின் - எளிய நிலையில் உள்ளவர் போல்; வந்த கருத்து என்? - வந்த நோக்கம் யாது? சொல்லுதி - சொல்வாய்; என்றான் - என்று சொன்னான்.