பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71அந்த இராமபாணம் என்ன செய்தது? அந்த வஞ்சகனின் மார்பிலே தைத்தது. அந்தக் கணமே அவன் தன் பெருவாய் திறந்து எட்டுத் திக்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரல் எழுப்பி “ஹா சீதே; ஹா லக்ஷ்மணா” என்று கூவி ஒரு மலைபோல் தன் சுய உருவில் வீழ்ந்தான்.

நெடு இலை சரம் – நீண்டு கூர்மையாயுள்ள சிலை போன்ற அலகு கொண்ட அந்த இராம பாணம்; வஞ்சனை – வஞ்சகனான அந்த மாரீசனுடைய; நெஞ்சு உற – இதயத்திலே நன்கு பொருந்த; பட்டது – போய் தைத்தது; அப்பொழுதே – அந்தக் கணத்திலே; பகுவாயினால் – பிளந்த தன் வாயினால்; அட்ட திக்கும் – எட்டுத் திக்குகளிலும்; அப்புறமும் – அவற்றிற்கு அப்பாலும்; புக – புகும்படி; விட்டு – பெருங்குரல் கொடுத்து; அழைத்து – “ஹா சீதே! ஹா லக்ஷ்மணா!” என்று கூவி; ஒரு குன்று என – ஒரு மலை போலத் தன் உண்மை வடிவில்; வீழ்ந்தான் – கீழே விழுந்தான் மாரீசன்.

வெய்யவன் தன்
        உருவொடு வீழ்தலும்
“செய்யது அன்று” எனச்
        செப்பிய தம்பியை
‘ஐயன் வல்லன்’ என் ஆர்
        உயிர் வல்லன், நான்
உய்ய வந்தவன்
        வல்லன் என்று உன்னினான்.

கொடிய வஞ்சகனான அந்த மாரீசன் தன் சுயரூபம் கொண்டு வீழ்ந்த உடனே இராமன் எண்ணியது யாது?