பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

யார் என்று நினைத்து; இவ் இடரின் – இவ்விதத் துன்பத்தில்: ஆழ்கின்றீர் – நீவிர் ஆழ்ந்து தவிக்கின்றீர்?

காவலன், ஈண்டு நீர்
        கருதிற்று எய்து மேல்
மூவகை உலகமும், முடியும்;
        முந்து உள
தேவரும் முனிவரும்
        முதல செவ்வியோர்
ஏவரும் வீவர்; நல்
        அறமும் எஞ்சுமால்

இராமன் எல்லா உயிர்களையும் காத்தல் வல்லோன். நீர் கருதியவாறு அழிவுறுவான் ஆயின் மூவுலகமும் முடியும்; பிரம்மாதிதேவர் அழிவர்; முனிவர்களும் அழிவார்கள்; நல்லதோர் அறமும் அழியும்.

காவலன் – எல்லா உயிர்களையும் காத்தல் வல்லோனாகிய இராமன்; ஈண்டு – இப்பொழுது; நீர் கருதிற்று – நீவிர் கருதியவாறு; எய்துமேல் – அழிவுற்றால்; மூவகை உலகமும் முடியும் – சுவர்க்கம், பூமி, பாதாளம் என்று சொல்லப்பெறும் மூவகை உலகங்களும், அனைத்தும் அழிந்துப்போம்; முந்து உள – முதன்மையாகக் கருதப்பட்ட பிரம்மாதி தேவர்களும்; முனிவரும் – முனிவர்களும். முதல – முதன்மையாகக் கொண்ட; செவ்வியோர் ஏவரும் – சிறந்தோர் யாவரும்; வீவர் – அழிவர்; நல் அறமும் – அழியாத நல்லதோர் அறமும்; எஞ்சும் ஆல் – அழியும்.