பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பாய்வதற்கு அப்பாற்பட்டது அன்று. எனவே வீண் ஆலோசனையில் காலதாமதம் செய்ய வேண்டாம்,” என்றான் லட்சுமணன்.

“ஆம்! அதுவே செய்யத் தக்க செயல்” என்று ஒப்புக் கொண்டான் இராமன்.

இருவரும் தெற்கு நோக்கி இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். ஒரு யோசனை என்பது பத்து மைல்.

அங்கே என்ன கண்டனர்? வீணைக்கொடி ஒன்று முறிந்து கிடக்கக் கண்டனர்.

“பிராட்டியை எடுத்துச் சென்றவன் இராவணனே. வீணைக் கொடி அவனது தேர்க் கொடியே. உற்று நோக்கின் அவனை எதிர்த்துப் போரிட்டவன் சடாயுவே எனலாம். ஆகவே நாம் வேகமாகச் செல்வோம். சடாயுவுடன் போரில் கலந்து கொள்வோம்” என்றான் இளையவன்.

“ஆம்; அதுவே சரி” என்றான் இராமன்.

இருவரும் சுழல் காற்று போலவும், காற்றாடி போலவும் விரைந்து சென்றனர்.

ஓரிடத்திலே வில் ஒன்று முறிந்து கிடக்கக் கண்டனர். இன்னும் சிறிது தூரம் சென்றனர். திரிசூலம் ஒன்றும், அம்புப்புட்டில் ஒன்றும் கிடக்கக் கண்டனர்.

இன்னும் சிறிது தூரம் சென்றனர். இராவணன் மார்பிலே அணிந்திருந்த கவசம் கிடக்கக் கண்டனர். அங்கே தேர்க் குதிரைகள் இறந்து கிடக்கக் கண்டனர். தேர்ப் பாகன் இறந்து கிடக்கக் கண்டனர். இன்னும் சிறிது தூரத்தில் கவச குண்டலங்கள் இரத்தின ஆபரணங்கள் முதலியன கண்டனர்.

“சீதா பிராட்டியைக் கொண்டு சென்றவன் இராவணனே. அவனுடன் போரிட்டவன் சடாயுவே” என்று உறுதியாகக் கூறினான் லட்சுமணன்.