பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

போர்க் குதிரைகளும் அழுதன. எவர் போல்? தசரத மன்னன் போல.

அம்மன்னவனைமான– இராமனுடைய பிரிவு பொறுக்கமாட்டாமல் வருந்தும் தசரத சக்கரவர்த்தியைப் போலவே; ஆவும் அழுத– பசுவும் அழுதன; அதன் கன்று அழுத– அப்பசுக்களின் கன்றுகளும் அழுதன; அன்று அலர்ந்த பூவும் அழுத– அன்று மலர்ந்த மலர்களும் அழுதன; புனல் புள் அழுத– நீர் வாழ் பறவைகளும் அழுதன. தேன் ஒழுகும் கரவும் அழுத– தேன் சொரியும் சோலைகளும் அழுதன; களிறு அழுத– யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுதன– தேரில் பூட்டப்படும் வலிமை பொருந்திய போர்க் குதிரைகளும் அழுதன.

வெய்யோன் ஒளி தன் மேனியில்
        விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும்
        இளையானோடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ?
        மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர்
        அழியா அழகு உடையான்.

‘அஞ்சனமோ! மரகதமணியோ! அலை புரண்டு வரும் கடலோ! மழை பொழிய எழுந்த மேகமோ!’ என்று சொல்லத் தக்க ஒப்பற்ற அழியாத அழகுடையவனாகிய இராமன் தன் திருமேனியினின்று பரவி எழும் பசிய ஒளியினால் சூரியனுடைய செவ்வொளி மறையும்படி, உளதோ இலதோ என்று ஐயுறத்தக்க இடையுடைய