பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

மிதிலை மாநகர் வழியே உலா வரும் இராமனைக் காண, முட்டித் தள்ளிக் கொண்டு வந்த பெண்கள் தான் எத்தனை, எத்தனை!

இராமனுக்கும் சீதைக்கும் பங்குனி உத்திரத்தின் போது திருமணம் நிகழ்ந்தது. அதே வேளையில் இராமனுடைய சகோதரர்களுக்கும், சனகனுடைய பெண்கள் மூவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மிதிலையிலிருந்து தசரதனின் திருமகனும், அவனுடைய தம்பியரும், புதுமணப் பெண்களும் அயோத்திக்குப் புறப்பட்டனர்.

வழியில் கோடாலியை ஏந்தி உருத்திரன் போல் எதிர்ப்பட்டான் பரசுராமன். இவன் கார்த்தவீரியார்ச்சுனனை கொன்றவன். தன் தந்தையை கொன்றவன் க்ஷத்திரியன் என்பதால் அந்த வகுப்பாரையே அழிக்க உறுதி கொண்டவன். தன் வில்லை நாணேற்றும் படி இராமனுக்குச் சூளுரைத்தான். இரகுவீரன் பரசுராமனிடமிருந்து வில்லை வாங்கினான். எளிதில் நாணேற்றினான். பரசுராமன் தன் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டான். இராமனை வணங்கினான். விடை பெற்றுக் கொண்டான்.

அயோத்தியிலே ஒரே கோலாகலம். மக்கள் அந்நகரை மிக மிக அழகாக அலங்கரித்தனர். ஏன்? தம் பேரன்புக்கு உரிய இராமனும் அவன் தம்பியரும் மணமுடித்து வருகிறார்களே, எவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தி!

பரதனைக் காண அவன் பாட்டன் கேகைய அரசன் விழைந்தான். பரதனும், சத்துருக்கனனும் கேகைய நாட்டிற்குச் சென்றனர்.

அவர்கள் சென்ற பின், தசரதன் இராமனுக்கு முடிசூட்ட தீர்மானித்தான். நாளும் குறித்தாயிற்று. இதுவே பாலகாண்டம்.