பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

அனுங்க– வருந்த; செஞ்செவிய– செந்நிறமான அழகு கொண்ட; கஞ்சம் நிகர்– தாமரை ஒத்த; சீறடியள் ஆகி– தனது சிறிய அடிகளை எடுத்து வைத்து நடந்து; அம் சொல்– அழகிய சொற்கள் பேசும்; இள மஞ்ஞை என– இளமயில் போலவும்; அன்னம் என– அன்னப் பறவை போலவும்; மின்னல் வஞ்சி என்ன– மின்னல் கொடி போலவும்; நஞ்சம் என– விஷம் போலவும்; வஞ்ச மகள்– வஞ்சனையே உருவாகிய அந்த சூர்ப்பணகை; வந்தாள்– வந்தாள்.

கானின் உயர் கற்பகம்
        உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை
        காம நிறை வாசத்
தேனின் மொழி உற்று இனிய
        செவ்வி நனி பெற்றோர்
மானின் விழி பெற்று
        மயில் வந்தது என வந்தாள்.

கற்பகத் தருவிலே படரும் கொடிக்கு காமவல்லி என்று பெயர். நறுமணம் வீசும் அந்தக் காமவல்லி போல் மேனி பெற்று வந்தாள் சூர்ப்பணகை; தேன் மொழியாள்; நல்ல அழகுடன் விளங்கினாள்.

இயற்கையிலேயே பார்ப்பதற்கு அழகாயிருக்கும் மயில். அதன் நடையும் அழகு. அதற்கு மானின் கண்ணும் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள்.

கானின் உயர்– உயர்ந்த நறுமணம் வீசுகின்ற; கற்பகம் உயிர்த்த– கற்பக தருவைச் சார்ந்து அதன்மேல் படர்கின்ற;