பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

சிவபெருமானது துணைவனாகிய குபேரனின் தங்கை; திக்கு யானைகளை உலுக்கி, கயிலாய கிரியைப் பெயர்த்தவனும் திரிலோக சக்கரவர்த்தியுமான இராவணனுக்குப் பின் பிறந்தவள்; என் பெயர் காமவல்லி; கன்னி நான்” என்றாள்.

பூவிலோன்– தாமரை மலரில் தோன்றிய பிரும்மாவினது; புதல்வன்– பிள்ளையாகிய புலஸ்தியருடைய; மைந்தன்– குமாரனாகிய விச்ரவசுவின்; புதல்வி– பெண் நான்; முப்புரங்கள் செற்ற– திரிபுர தகனம் செய்த; சேவலோன்– ரிஷபத்தை வாகனமாக உடைய சிவபெருமானின்; துணைவனான– நண்பனாகிய; செங்கையோன்–சிவந்த கைகளை உடைய (குபேரனின்); தங்கை–தங்கை; திக்கின் மா எலாந்– திக்கஜங்களை எல்லாம்; தொலைத்து– வலிவிழக்கச் செய்து; வெள்ளிமலை எடுத்து– வெள்ளி மயமான கைலாச கிரியைப் பெயர்த்த; உலக மூன்றும் காவலான்–மூவுலகும் காத்தல் வல்ல இராவணனது; பின்னை– பின் பிறந்தவள்; காம வல்லியாம் கன்னி– காமவல்லி எனும் பெயர் கொண்ட கன்னி நான்.

தனது பெருமைகளை எல்லாம் சொல்லிப் பார்த்தாள்; தான் கன்னி என்றும் கூறினாள். இராமன் மீது விருப்பம் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள்; இராமன் இணங்கவில்லை; மறுத்துவிட்டான்.

அந் நிலையில் சீதையைக் கண்டாள். அவளது பேரழகு கண்டாள். அவள் இருப்பதால் இராமன் தன்னை லட்சியம் செய்யவில்லை என்று கருதினாள். இராமன் இல்லாதபோது சீதையை எடுத்துப் போக முயன்றாள். அந்தச் சமயத்திலே அருகிலே காவல் நின்ற இளையவன் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விரட்டிவிட்டான்.