பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

ராமன் லட்சுமணன் ஆகிய இருவரும் பம்பைக் கரை அடைந்தனர். இராமபிரான் பம்பையில் நீராடினான். அருகிலிருந்த பூஞ்சோலையில் அமர்ந்தான். மாலைக் கடன் முடித்தான். கதிரவனும் மறைந்தான். இரவும் வந்தது. இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் இரவுப் பொழுதை அந்த இடத்திலேயே போக்கினர்; நீள் இரவு சென்றது. பொழுது புலர்ந்தது. கதிரவனும் வந்தான். ராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்; சபரி சொன்ன வழியே சென்றனர்; ருசியமுக பர்வதத்தின் மீது ஏறினர்.

வில்லேந்திய வீரராய் இவ்விருவரும் வருதல் கண்டான் சுக்ரீவன்; மாற்றார் யாரோ வருகின்றார் என்று அஞ்சினான்; அவ்விருவரும் யார் என்று அறிந்து வருமாறு மாருதியை ஏவினான்; அருகிலிருந்த குகை ஒன்றன் உள்ளே சென்று ஒளிந்து கொண்டான்.

அஞ்சனையின் மகனாகிய அநுமன் ஒரு பிரம்மசாரி உருவம் தாங்கி இராமர் லட்சுமணர் வரும் வழியில் மறைவான ஓரிடத்திலே நின்று கொண்டிருந்தான்.

"இவர்களோ தவ வேடம் கொண்டுள்ளனர். கையில் உள்ள வில்லோ அந்த வேடத்துக்கு ஏற்ப இல்லை. மாறுபாடாக உள்ளது. இவர் யார்? சிவனோ? திருமாலோ? பிரமனோ?

சிவன், திருமால், பிரமன் என்றால் மூவராக அன்றோ வருவர்! இவர் இருவரே வருகின்றனர். ஆதலின் இவர்

கி.—1