பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்தியரும் அல்லர்; மானிடரும் அல்லர். வானுலகில் வாழும் தேவரே மானிட வடிவில் வந்துள்ளனர். அரியதொரு பொருளை இழந்து அதைத் தேடுவார் போல் காட்சியளிக்கின்றனர்!"

***

என்பன பலவும் எண்ணி .
        இருவரை எய்த நோக்கி
அன்பினோடு உருகு கின்ற
        உள்ளத்தின் ஆர்வத்தோரை
முன்பிரிந்து அனையர் தம்மை
        முன்னினான் என்ன நின்றான்
தன் பெரும் குணத்தால் தன்னைத்
        தான் அலது ஒப்பிலாதான்.


இவ்விதம் பலவாறு எண்ணிக்கொண்டு அவ்விருவரையும் எதிர்பார்த்து நின்றான் அநுமன். தனது அன்புக்குரிய ஒருவரை நீண்ட நாள் முன் பிரிந்து, பின் தற்செயலாக அவரைக் கண்டவன் போல நின்றான். உருகும் உள்ளத்தனாகி நின்றான். பெருமை மிகு குணத்திலே தனக்கு ஒப்பார் இல்லாத குணக்குன்றாகிய அநுமன் நின்றான்.

***

தன் பெரும் குணத்தால் - தன்னுடைய பெருமை மிகு குனத்தினால்; தன்னை தான் அலது ஒப்பு இலாதான் . தனக்குத் தானே ஒப்புமையன்றி வேறு ஒப்புமை எதுவும் கடனுதற்கு இயலாத அந்த அநுமன்; என்பன பலவும் எண்ணி - மேற்கூறியபடி பலவாறாக எண்ணிக் கொண்டு; இருவரை எய்த நோக்கி - இராம லட்சுமணர் ஆகிய அந்த இருவரையும் அடையக் கருதி; அன்பினோடு உருகுகின்ற அன்பினால் உருகுகின்ற; உள்ளத்தன் - மனமுடையவனாகி; ஆர்வத்தோரை - அன்பு கொண்ட