பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

ஆறுமுகக் கடவுள்; அறுவகை முகமும் - ஆறுமுகங்களையும்; திக்கு நோக்கிய புயங்களும் - திசைதொறும் விளங்கும் பன்னிரு தோள்களையும்; சில கரந்து அனையான் - சிலவற்றை ஒளித்து (ஒரு முகமும் இரு கைகளுமே கொண்டவனாய்) விளங்கியவன்போல்; ஒக்க நோக்கியர் - ஒருவர் போலவே அனைவரும் தன்னையே நோக்கும் மகளிர்; குழாத்திடையே - கூட்டத்தினிடையே; உறங்குவானை - உறங்குகின்றவனை; நோக்கினன் - பார்த்தான்.

***


‘வளையும் வாள் எயிற்று
        அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
அளையில் வாளரி அனையவன்
        யாவனோ? அறியேன்!
இளைய வீரனும் ஏந்தலும்
        இருவரும் பலநாள்
உளையும் வெஞ்சமம் இவனுடன்
        உளது!’ என உணர்ந்தான்.

குகையிலே கிடக்கும் சிங்கம் போன்ற இவன் அரக்கனோ? அன்றி, சிவபெருமானின் மகனாகிய குமரனோ? எவனோ அறியேன். எவன் ஆயினும் ஆகுக. இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் இவனுடனே நீண்ட நாள் செய்யவேண்டிய கொடிய போர் முன்னே யுளது என்று அநுமன் அறிந்து கொண்டான்.

***

அளையில் - மலைக்குகையிலே கிடக்கும்; வாள் அரி அனையவன் - கொடிய சிங்கம் போன்றவனான இவன்; வளையும் வாள் எயிற்று அரக்கனோ - வளைந்த ஒளியுள்ள பற்கள் கொண்ட அரக்கனோ? கணிச்சியான் மகனோ? - மழுவேந்திய சிவபெருமானின் மகனாகிய குமரனோ?

கி.—8