பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

ஒருவரை; முன் பிரிந்து - முன்பு ஒரு சமயம் விட்டுப் பிரிந்து; அனையர் தம்மை - அவ்வன்பரை; முன்னினான் என நின்றான் . மீண்டும் எதிரிலே கண்டவன் போல் மகிழ்ந்து நின்றான்.

***

மஞ்சு எனத் திரண்ட கோல
        மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி
        நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண
        யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில்வந்தேன்;
        நாமமும் அநுமன் என்பேன்.

இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் அருகில் வந்தனர். அவ்விருவர் முன்சென்று நின்றான் அநுமன். தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.

அஞ்சனையின் புதல்வன் சொல்கிறான். யாரைப் பார்த்து? இராமனைப் பார்த்து, என்ன சொல்கிறான்?

"நீலமேக மேனியனே! சிவந்த தாமரை போன்ற அழகிய கண்களை உடையவனே! காற்றின் வேந்தனாகிய வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றிலே பிறந்தவன் நான். அநுமன் என்பது என் பெயர்!

கேசரி என்னும் குரங்கரசனின் மனைவி அஞ்சனை. அவளுக்குக் காற்று தேவன் திருஅருளாலே பிறந்தவன் ஆஞ்சநேயன். இவன் பிறந்த உடனே தனக்குப் பசி என்று தன் தாயிடம் கூறினான். "பழங்களைப் புசி" என்று அவள் கூறினாள்.