பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வீயாது - வானர வீரர் உயிர் துறக்க முயன்றபோது நானும் அவருடன் உயிர் விடாமல்; யான் வாளா விளிவேனோ - இங்ஙனம் வந்து நான் வீணில் மாள்வேனோ?

***

வல் அரக்கன் தனைப் பற்றி
        வாய் ஆறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால்
        “காட்டு” என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதிவேல்
        இராவணனும் இவ் ஊரும்
மெல் அரக்கின் உருகி விழ
        வெம் தழலால் வேய்கேனோ?

வலிய அந்த அரக்கனைப் பிடித்து, மலையையும் பொடியாக்கும் எனது கைகளால் ஒரு குத்துவிட்டு வாயிலிருந்து ரத்தம் கக்கச் செய்து “சீதை எங்கே காட்டு” என்று கேட்டு அங்கே சென்று காணலாமா? இந்த இராவணனும் இவனது இலங்கை நகரும் அரக்குப் போல உருகி ஓடும்படி தீயிட்டுப் பொசுக்கலாமா?”

இவ்விதம் பலவாறு எண்ணிய வண்ணம் சுற்றித் திரிகிறான் அநுமன். சீதை இருந்த அசோக வனம் நண்ணினான்.

***

வல் அரக்கன் தனைப் பற்றி - கொடிய அரக்கனாகிய இராவணனைப் பிடித்து; வாய் குருதி உக - அவனது வாயிலிருந்து இரத்தம் கக்கும்படியாக; கல் அரக்கும் கரதலத்தால் - கல்லையும் அழிக்கவல்ல என் கைகளால்; (குத்தி) காட்டு என்று - சீதை எங்கே காட்டு என்று; காண்கேனோ - (அவன் காட்டக்) காணக் கடவேனோ (அன்றி); எல் அரக்கும் - சூரிய ஒளியையும் அழிக்கின்ற; அயில் நுதி வேல் –