பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

காவலராகிய அரக்கப் பெண் பயமுறுத்த; அங்கு இருந்தாள் - அந்த அசோக வனத்தில் சிறையிருந்தாள்.

***

துயில் எனக் கண் இமைத்தலும்,
        முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயிலிடைத் தந்த விளக் கென
        ஒளியிலா மெய்யாள்
மயில் இயல் குயில் மழலையாள்
        மானினம் பேடை
அயில் எயிற்று ஏவல் புலிக்
        குழாத்து அகப்பட்டது அன்னாள்.

மயிலின் சாயலும் குயிலின் இனிய குரலும் கொண்ட அந்தச் சீதை உறக்கம் ஒழித்தாள்; கண் மூடினாள் அல்லள்; கடும் புலிகளின் கூட்டத்திலே சிக்கியதொரு பெண் மான் குட்டி போல் விளங்கினாள்.

***

துயில் என - தூக்கம் என்று சொல்லும்; கண் இமைத்தலும் முகிழ்த்தலும் - கண்களை இமைப்பதும் மூடுவதும்; துறந்தாள் - துறந்தவளாய்; வெயில் இடைத் தந்த விளக்கு என - வெயிலின் இடையே ஏற்றிய விளக்கு போல; ஒளி இலா மெய்யாள் - ஒளியிழந்த மேனிகளாய்; மயில் இயல் - மயில் போலும் சாயலும்; குயில் மழலையாள் குயில் போலும் இனிய சொல்லினாள்; இளம் மான் பேடை - இளம் பெண் மான்; அயில் எயிற்று வெம்புலி குழாத்து - கூரிய பற்களை உடைய கொடிய புலிக்கூட்டத்தின் இடையே; அகப்பட்டது அன்னாள் - சிக்கியது போல வருந்தினாள்.

***