பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151



அரக்கியரும் சீதையை அச்சுறுத்தத் தொடங்கினர். அப்போது விபீடணனின் மகளாகிய திரிசடை என்பாள் அரக்கியரைத் தடுத்து விலக்கினாள்.

சிறிது நேரத்தில் அரக்கியர் எல்லாரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

***


என்னை? நாயகன் இளவலை
       எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு
       அறிவிலள் எனத் துறந்தானே?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?
       என்று என்று முறையால்
பன்னி வாய் புலர்ந்து உணர்வு
       தேய்ந்து ஆருயிர் பதைப்பாள்.

அசோக வனத்திலே சிறை இருந்த சீதை புலம்புகிறாள் இராமன் என்னை மறந்தானோ? லட்சுமணனை நான் நிந்தித்துக் கூறினேனே! அது கேட்டு என் மீது கோபம் கொண்டு என்னைத் துறந்தானோ? நான் செய்த ஊழ்வினை தான் இவ்வாறு வந்து முடிந்ததோ?

இவ்வாறு எண்ணி எண்ணி, ஏங்கி ஏங்கிப் புலம்பிப் புலம்பி, நா வறண்டு வாய் உலர்ந்து, உணர்ச்சி சோர்ந்து பதைக்கிறாள்.

***

எண்ணிலா வினையேன் - எண்ணி அளவிடுதற்கு அரிய தீவினை உடைய நான்; இளவலை - லட்சுமணனை; சொன்ன வார்த்தை கேட்டு - சொன்ன கடுஞ் சொற்களைக் கேட்டு; நாயகன் - இராமன்; அறிவிலள் எனத் துறந்தானோ இவள் அறிவில்லாதவள் என்று கருதி வெறுத்து