பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172



எந்தையர் முதலினர் - எனது தந்தையாகிய கனகமகாராஜன் முதலாய; கிளைஞர் யார்க்கும் - என் சுற்றத்தார் எல்லாருக்கும்; என் வந்தனை விளம்புதி- எனது வணக்கத்தைத் தெரிவிப்பாயாக; கவியின் மன்னனை - வானரங்களுக்கு அரசனாகிய சுக்கிரீவனை நோக்கி; சுந்தரத் தோளனை - அழகிய தோள்களை உடையவனாகிய இராமபிரானை; தொடர்ந்து - பின் தொடர்ந்து; காத்து - பாதுகாத்து; போய் - அயோதிக்குச் சென்று; அந்தம் இல் திரு நகர்க்கு - அழிவற்றதான அழகிய அந்த அயோத்திக்கு; அரசன் ஆக்கு - முடி சூட்டி அரசனாக்குவாயாக என்று; (நான் கேட்டுக் கொண்டதாக) என்பாய் - சொல்வாயாக.

ஈண்டு ஒரு திங்கள் நீ
        இடரின் வைகவும்
வேண்டுவது அன்று; யான்
        விரைவில் வீரனைக்
காண்டலே குறைவு; பின்
        காலம் வேண்டுமோ?
ஆண்டகை இனி ஒரு
        பொழுதும் ஆற்றுமோ?

“இன்னும் ஒரு மாத காலம் இத்துன்பத்தை சகித்துக் கொண்டு உயிரோடிருப்பேன் என்று சொன்னாயே, தாயே! அந்த ஒரு மாத காலம் கூட வேண்டுவது இல்லை. நான் வேகமாகச் சென்று இராமபிரானிட்ம் சொல்ல வேண்டியது ஒன்றுதான் குறை. அடுத்த நிமிடமே புறப்பட்டு வருவார். கணமும் தாமதிக்க மாட்டார்.

***

ஈண்டு - இங்கு; ஒரு திங்கள் - இன்னும் ஒரு மாத காலம்; நீ இடரின் வைகவும் - நீ துன்பத்துடனே உயிர் வைத்துக் கொண்டிருக்கப் போவதாகச் சொன்னாயே;