பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

தசரத மகாராசனால் பேணிக் காப்பாற்றப்பட்டது. சீதாராம கல்யாணத்தின்போது மாமனார் வெகுமதியாகத் தசரதன் சீதைக்கு அளித்தது சீதையால் தன் கண்மணி போல் பாதுகாத்துத் தனது ஆடையில் முடிந்து வைக்கப்பட்டது.

***

நாடி வந்து - என்னைத் தேடி வந்து; எனது இன் உயிர் நல்கினை - எனது இனிய உயிர் கொடுத்தாய், நல்லோய் - நல்லவனே! கண்மணி ஒப்பது - கண்ணின் கருவிழி ஒத்ததும் (அரியது) தொல்நாள் - நீண்ட நாளாக எனது ஆடையில் முடித்து வைக்கப்பட்டு இருந்ததும்:(ஆகிய) சூடையின் மணி- இந்தச் சூடாமணியை பேர் அடையாளம் - பெரிய அடையாளமாகக் கோடி - கொள்வாயாக; என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள்.

***

தொழுது வாங்கினன்;
        சுற்றிய தூசினின் முற்றப்
பழுதுறாவகை பந்தனை
        செய்தனன்; பல் கால்
அழுது மும்மை வலம் கொடு
       இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினாள்;
       ஏகினன் இப்பால்.

சீதையை வணங்கி அவள் தந்த சூடாமணியைப் பெற்றுக் கொண்டான் அநுமன். தன்னுடைய ஆடையிலே அதைப் பத்திரமாக முடிந்து கொண்டான். அந்த சீதா தேவியைப் பிரியவேண்டுமே என்று அழுதான். மும்முறை பிராட்டியை வலம் வந்தான். வணங்கினான். பிராட்டியும் அநுமனை அன்புடன் ஆசீர்வதித்தாள். சென்றான் அநுமன்.