பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

அநுமனைக் கட்டிப் போட்டான். ஒரு முகூர்த்தக் காலம் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று ஆதியில் பிரமன் விதித்தபடியால் அநுமனும் அதற்குக் கட்டுப்பட்டான்.

கட்டுண்ட அநுமனை அரக்கர் எல்லாரும் தெருத்தெருவாக இழுத்துச் சென்று இராவணன் முன் நிறுத்தினர்.

***

நேமியோ குலிசியோ?
        நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ?
        தறுகண் பல்தலைப்
பூமி தாங்கும் ஒருவனோ?
        பொருது முற்றுவான்
நாமமும் உருவமும்
        கரந்து நண்ணினாய்.

“யார் நீ? சக்கராயுதம் ஏந்திய திருமாலோ? வச்சிராயுதம் தாங்கிய இந்திரனோ? தாமரையில் வசிக்கும் பிரமனோ? பூமியைத் தாங்கும் ஆதிசேஷனா? பெயரும் உருவமும் மறைத்து இங்கு வந்தது எதற்கு? போரிட்டு அழிந்து போவதற்கா?”

***

நேமியோ - சக்கரம் ஏந்திய திருமாலோ? குலிசியோ - வச்சிரப்படை ஏந்திய இந்திரனோ? நெடும் கணிச்சியோ - நீண்ட சூலாயுதம் ஏந்திய சிவனோ; தாமரைக் கிழவனோ - தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனோ; தறுகண் - அஞ்சாமையும்; பல் தலை - பல தலைகளும் கொண்டு; பூமி தாங்கும் ஒருவனோ - பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேட்னோ; பொருது - போர் செய்து; அழிவான் - அழிந்து போவதற்காக; நாமமும் - பெயரும்; உருவமும் -