பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

புறமாக முறுக்கி; கை எடுத்து அழைத்து – தம் துதிக்கைகளை மேலே தூக்கிக் கொண்டு வாய்விட்டுக் கதறின; ஓடின.

***

மருங்கின் மேல் ஒரு மகவு
        கொண்டு ஒரு தனி மகவை
அருங்கையால் பற்றி மற்றொரு
        மகவு நின்று அரற்ற
நெருங்கி நீள் நெடும் எரிகுழல்
        சுறுக் கொள நீங்கிக்
கருங்கடல் தலை வீழ்ந்தனர்
        அரக்கியர் கதறி.

இடுப்பிலே ஒரு குழந்தை; கையிலே பிடித்த வண்ணம் இன்னொரு குழந்தை. மூன்றாவது குழந்தை பின்னே அழுது கொண்டே வருகிறது. அவர் தம் அடர்ந்த கூந்தல் தீப்பிடித்துச் சுறுசுறு என்று கருகியது. தீயின் வெப்பம் தாங்கமாட்டாது அரக்கப் பெண்கள் கடலிலே போய் விழுந்தார்கள்.

***

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு – இடுப்பிலே ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை – மற்றொரு குழந்தையை; அரும் கையால் பற்றி – தன் அரிய கையினால் பிடித்துக் கொண்டு; மற்று ஒரு மகவு நின்று அரற்ற – பின்னே நின்று வேறு ஒரு குழந்தை அழ; நெருங்கி நீள் நெடும் எரி குழல் சுறு கொள – அடர்ந்து நீண்ட தம் எரி போன்ற கூந்தல் அந்தத் தீயிலே சுறுசுறு என்று தீய்ந்துபோக; அரக்கியர்– அரக்கப் பெண்கள்; நீங்கி - தம் இடம் விட்டுச் சென்று; கதறி – வாய்விட்டு அழுது